சைக்கிள்

நான் எழுந்திருக்க மாட்டேன் என்றே சனிக்கிழமை இரவு மட்டும் செல்போனை எடுத்து படுக்கையிலிருந்து தூரமாய் ஷெல்பில் வைத்துவிடுகிறாள் நந்தினி. அதுவும் நாள் தவறாது காலை 5.30 க்கெல்லாம் சரியாக அலாரம் அடித்துத் தொலைக்கிறது. அதை அணைத்துத் தொலைப்பதற்கென்றே எழ வேண்டியதாகப் போய்விடுகிறது.

‘ஆஃபீஸ் கூட லீவு விடறான். ஞாயிற்றுக்கிழமைதானேம்மா வாக்கிங்குக்கும் வாரம் ஒரு நாள் லீவு விடக்கூடாதா’ன்னா காதில் விழாத மாதிரியே போய்விடுவாள். அது சரி, இவள் விட்டாலும் கீழ் வீட்டில் உள்ள ரமணன் விட்டால்தானே ஆச்சு? 5.45 க்கெல்லாம் கீழே வரவில்லையென்றால் அவரே மேலே வந்துவிடுவார். மனிதனுக்கு காலங்கார்த்தாலே என்னைத் தொல்லை செய்யவில்லை என்றால் அன்றிரவு தூக்கமே வராது போல. சொல்லப்போனால் இந்த வாக்கிங் பிரச்சினையெல்லாம் அவராலே வந்ததுதான்.

நந்தினியைப் பார்த்தேன். ‘எழுந்து காபியாவது போட்டுக்குடும்மா, ரிடர்ன் வர்றதுக்குள்ள வயிற்றைப் பிசையும்டி..’ என்ற என் புலம்பலைக் கேட்காமல், ‘மற்ற நாள்தான் படுத்தறீங்க, ஞாயித்துக் கிழமையாவது தூங்கவிடுங்க..’ என்று இழுத்துப் போர்த்திக்கொண்டாள். முகம் கழுவி ரெடியாகி ஷூக்களைப் போட்டுக் கொண்டிருக்கும்போதே மேலே படிகளில் ஏறி வந்தபடியே.. ரமணனின், ‘லோகேஷ்’ என்ற சத்தம் கேட்டது.

‘அதான் வந்துட்டனே, அதுக்குள்ள வந்துடுவீங்களே.. இறங்குங்க போலாம்..’

இருவரும் கீழே இறங்கினோம். நாங்கள் இருப்பது அழகிய காம்பவுண்ட் சுவற்றுடன் கூடிய தனி வீடு. இருவருமே வாடகைக்குதான் குடியிருக்கிறோம். கீழே அவரும், மாடி போர்ஷனில் நாங்களும். ரமணன் திருமங்கலத்தில் ஏதோ பாங்கில் வேலை செய்கிறார். எனது அலுவலகமோ நுங்கம்பாக்கத்தில் இருக்கிறது. அவர் என்னை விட வயதில் ஐந்தாறு வயது மூத்தவர், அன்பானவர். என்ன.. ஒரு பிரச்சினை, மனிதர் கதை சொல்ல ஆரம்பித்தால் காதில் ரத்தம் வந்துவிடும். இராமாயணம் துவங்கி, குட்டிக்கதைகளில் பயணித்து, நேற்றைய வார இதழ்க்கதைகள் வரைக்கும் பின்னு பின்னு என பின்னிவிடுவார். தமிழார்வம் மிக்கவர், அவர் மூத்த மகனுக்குக்கூட அவரது தந்தையார் பெயரான ‘வில்லாளன்’ என்ற பெயரையே வைத்திருக்கிறார். ஆனால் பழக இனிமையானவர், அவர் இல்லாவிட்டால் நானெல்லாம் எங்கே இவ்வளவு காலையில் எழுந்திருக்க? அல்லது வாக்கிங் பழக.?

கீழே வந்து மெயின் கேட்டின் பூட்டை அவர் திறக்கவுமே ஏதோ ஒரு வித்தியாசம் உறைக்க இயல்பாக அவரைக்கேட்டேன், ‘ரமணன், வில்லுவோட சைக்கிள் எங்க.? எங்காச்சும் ஃபிரண்ட் வீட்ல போட்டுட்டானா.?’ ரமணன் சட்டெனத் திரும்பி வழக்கமாக சைக்கிள் நிற்கும் இடத்தைப் பார்த்துவிட்டு என்னை நோக்கித் திரும்பினார். அவர் முகத்தில் குழப்பம். கீழே மெயின் கேட்டைத் திறந்தவுடன் ஐந்தடியில் அவர் வீட்டுக் கதவு. இடது புறம் மேலே மாடிக்கு எங்கள் போர்ஷனுக்குச் செல்வதற்கான படிக்கட்டு. வலது புறம் போர்டிகோ. அதில் அவரது காரும், முன்னதாக எனது பைக்கும் வழக்கம் போல நின்றுகொண்டிருந்தன. வாசலுக்கும், மாடிப்படிக்கும் இடைப்பட்ட இடத்தில் வழக்கமாக நிற்கும் சுவரை ஒட்டிய இடத்தில் வில்லாளனின் சைக்கிள் இப்போது இல்லை. அது ஒரு அழகிய ஹீரோ ரேஞ்சர். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வில்லு, ரமணனை தொல்லை செய்து வாங்கியிருந்தான்.

வில்லுவுக்கு பக்கத்தில் நண்பர்கள் யாரும் இல்லை, மேலும் எங்கள் இருவருக்குமே நேற்று மாலை அங்கே சைக்கிளை பார்த்த ஒரு ஞாபகம். பின்னர் வரிசையாக நிகழ்ந்தன இவை. வில்லாளனை எழுப்பினோம். கேட்டோம். முதலில் விழித்தவன் பின்னர் ‘அப்பா.. என் சைக்கிள்’ என்று அழத்துவங்கினான். வில்லுவின் அம்மா எழுந்து வந்தார். நந்தினி எழுந்து வந்தாள். சரிதான், சைக்கிள் இரவில் திருடு போய்விட்டது. யாரோ இரவில் மார்பளவு இருக்கும் இந்த சுவர் ஏறிக்குதித்து தூக்கிப் போய்விட்டனர். எல்லோரையும் விட வில்லு கலங்கிப் போய்விட்டான். அழுகை அவன் கண்களை முட்டியது. ஆசை ஆசையாய் அவன் வாங்கியது. மாலை நேரங்களில் ஒரு பறவையைப்போல அதில் அவன் வலம் வருவான். அவன் துக்கம் என்னை மிகவும் பாதித்தது. இந்த பிரச்சினையில் எங்கள் அன்றைய வாக்கிங் தடைபட்டது. பத்து மணிக்கு மேல் நானும் ரமணனும் போய் பக்கத்து காவல் நிலையத்தில் புகார் செய்வதாய் முடிவு செய்தோம். முதலில் சைக்கிள்தானே இதெற்கெல்லாம் புகாரா? யார் கவனிக்கப்போகிறார்கள், அவனவன் கொலை, கொள்ளைன்னு அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கிறான். இந்த சைக்கிள் மிஸ்ஸிங் கேஸை போலீசே எடுத்துக்கொள்வார்களா என்பது சந்தேகமே என்று கூறி, சைக்கிள் 5000 ரூபாய்தான், போய்த் தொலைகிறது என விட்டு விடலாமா? என்றார் ரமணன். எது எப்படி இருப்பினும், நாம் அலட்சியப்படுத்தக்கூடாது.. சைக்கிளானாலும் குற்றம் குற்றம்தான். குறைந்தபட்சம் நம்மைப் போன்றவர்கள் குற்றத்தைப்பதிவு செய்யவாவது வேண்டும்தான், அப்போதுதான் இது போன்ற சிறிய குற்றங்களின் மீதும் போலீஸ் கவனம் கொள்வார்கள் என்று நான் நியாயம் பேசியதில் ரமணன் ஒப்புக்கொண்டார்.   

10.10 க்கெல்லாம் காவல் நிலையத்தின் வாசலில் இருந்தோம். வாசலிலேயே ஒரு காவலர் எங்களை மறித்தார்.

‘என்னையா விசயம்.?’

‘இல்ல சார், சைக்கிள் தொலைஞ்சுபோச்சுது, கம்ளைண்ட் குடுக்க வந்தோம்.’

‘சைக்கிளா? எங்க வச்சிருந்தீங்க.?’

‘வீட்லதான் சார்..’

‘வீட்லன்னா? வீட்டுக்குள்ள பீரோவிலயா?’

‘இல்ல சார். காம்பவுண்ட் வீடு. உள்ளதான் நிப்பாட்டியிருந்தோம்’

‘உள்ளன்னா? காம்பவுண்டுக்கு கேட்டு இருக்கா? காம்பவுண்டுன்னா என்ன பெரிய கோட்டையா.? அதப் பூட்டினீங்களா? வேற எதும் காணாமப் போச்சா.?’

அவருடைய பேச்சு எங்களை மிகவும் சோர்வடைய வைத்தது. சைக்கிளாம், பெரிய சைக்கிள், வந்துட்டானுங்க கம்ப்ளைண்ட் கொடுக்க என்பதைப்போல அவரது கேள்விகள் இருந்தன.

‘கேட்டு இருக்கு சார், பூட்டியிருந்தோம். கார், பைக் கூடத்தான் நிறுத்தியிருந்தோம். மத்தது ஒண்ணும் ஆவல..’

‘சரி சரி, அந்தா உக்காந்துருக்காரு பாருங்க, அவருகிட்ட கம்ளைண்ட் குடுங்க..’

அடடா, அவருகிட்டயும் இதே மாதிரி புலம்பணுமா.? இதுக்குதான் வேண்டாம்னு சொன்னேன் என்பது போல ரமணன் என்னைப் பார்த்தார். நான் அவரை கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு அவரிடம் சென்றேன். நல்லவேளை, அந்த ரைட்டர் முன்னவரைப் போலில்லாமல் கொஞ்சம் அமைதியாகக் கேட்டுக்கொண்டார். பின்னர், முகவரி, விபரம், சைக்கிள் ஃபிரேம் நம்பர் எல்லாவற்றையும் எழுதி ஒரு கம்ளைண்டாகக் கொடுக்கச் சொன்னார். வேண்டுமானால் மாலை வந்து எஃப்ஐஆர் காப்பி வாங்கிக் கொள்ளும்படியும், சைக்கிள் கிடைத்தால் சொல்லியனுப்புவோம் என்று சொன்னார். கொஞ்சம் ஆசுவாசமடைந்து, நாங்கள் கொண்டு சென்ற பேப்பரில் நானே அத்தனையையும் எழுதத் துவங்கினேன். சமீபத்தில் வாங்கிய சைக்கிளென்பதால் பில்லைப் பார்த்து ஃபிரேம் நம்பரை SMS அனுப்பும் படி அவர் மனைவிக்கு ரமணன் செல்போனில் செய்தி அனுப்பினார். அதற்குள் நான் எழுதிமுடித்து ரமணனை கையெழுத்துப் போடச்சொன்னேன். அவரும் போட்டார். பின்னர் இருவருக்கும் அலுவலக மூளை வேலை செய்ய இதை ஒரு காப்பி எடுத்துக்கொண்டு கொடுத்தால் என்ன என்று தோன்ற, அதற்குள் அந்த ரைட்டரும் டேபிளை விட்டு எழுந்து வெளியே போய்விட, நாங்களும் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்.

அடுத்த பத்து நிமிடங்கள் காவல் நிலையத்துக்கு இடப்புறமும், வலப்புறமும் அலைந்தும் ஒரு ஜெராக்ஸ் கடையைக் காணமுடியவில்லை. இருந்த ஒரே ஒரு கடையும் அடைத்திருந்தது, ஞாயிற்றுக்கிழமையென்பதால் இருக்கலாம்.

‘அப்படியே கொடுத்திடலாம் ரமணன், காப்பி வச்சு நாம் என்ன பண்ணப்போறோம்?’ என நான் சொல்ல, ‘என்னக்கேட்டா கம்ளைண்டே கொடுக்க வேண்டாம்ப்பேன், பாத்தீங்கள்ல அங்க எப்பிடி மரியாதைன்னு.. முதல்லயே 100 ரூபாயைத் திணித்திருந்தோம்னா மரியாதையா பேசியிருப்பான்..’ என அவர் சொல்ல, நாங்கள் நடுத்தெருவில் நின்றுகொண்டிருந்தோம். ஒரு குரல் எங்களை வழி மறிக்க திரும்பினோம். காவல் நிலையத்தில் பார்த்த அதே காவலர்தான்.

‘என்னையா பண்றீங்க? கம்ளைண்ட் குடுத்தாச்சா?’

‘அதான் சார், எழுதிட்டோம். ஒரு காப்பி ஜெராக்ஸ் எடுத்துக்கலாம்னு..’

‘ஜெராக்ஸ் எடுத்து என்ன பண்ணப்போறீங்க? அது இருக்கட்டும். உங்க செல்போன் எங்க?’

ரமணன் சடாரென தன் பாண்ட், சட்டை பாக்கெட்டுகளில் துழாவ, அந்த காவலர் தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து ஒரு செல்போனை எடுத்து எங்கள் முன்னால் உயர்த்தி ஆட்டினார். பதினான்காயிரம் மதிப்புள்ள ரமணனின் புதிய சோனி எரிக்ஸன் மொபைல். அந்த மொபைலை என் கைகளில் திணித்துவிட்டு, என் கையிலிருந்த கம்ளைண்ட் பேப்பரை பிடுங்கிக்கொண்டு,

‘இத நான் ஃபைல் பண்ணிடுறேன். சைக்கிள் கிடைச்சா போன் பண்ணுவாங்க. முதல்ல இருக்கற பொருள்கள பத்திரமா, கவனமா வச்சுக்கங்கையா, போங்க.. போங்க..’

அலட்சியமாக ஆனால் கண்டிப்பாகச் சொல்லிவிட்டு திரும்பி காவல் நிலையத்தை நோக்கி செல்லத் துவங்கினார்.

.

ஏலகிரி -புகைப்படங்கள்

ஏலகிரி உலா மிகவும் எளிமையாக, வித்தியாசமாக இருந்தது. மூவரே சென்றிருந்ததால் கூட்டாக ரசித்த மாதிரியும் இருந்தது, அதே நேரம் கும்மாளமில்லாமல் இருந்ததால் ஒருவர் இன்னொருவரின் தனிமையில் தலையிடாமல் சுதந்திரமாக சுற்றித் திரிந்ததைப்போலவும் இருந்தது. இது பொதுவாக நண்பர்களோடு செல்லும் சுற்றுலாவில் கிடைப்பது அரிதிலும் அரிது. கும்மாளம் ஒரு வகை மகிழ்ச்சி எனில் இது இன்னொரு வகையானது. மேலும் எழுத நேரமின்மையால் ஏலகிரி உலாவின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன். இந்தப் பயணம் குறித்த அழகானதொரு கார்க்கியின் பகிர்வைக் காணலாம்.

DSC00695 DSC00447 DSC00496 DSC00561 DSC00667  DSC00465 DSC00466  DSC00562 DSC00585 DSC00644 DSC09193 DSC00663 DSC00705 DSC00448 DSC00457 DSC00468 DSC00437 DSC00781 DSC00664 DSC00709 DSC00725DSC00538

குறிப்பு : நானில்லாத படங்கள் நானெடுத்தவை என்பதை நீங்கள் அறிவீர்கள் (நம் திறமைதான் ஊரறிஞ்சதாச்சே.. ஹிஹி). என் படங்களுக்காக கார்க்கிக்கு நன்றி.

.

கொடுங்கனவு

நேற்று ஒரு கனவு கண்டேன். சொன்னால் நிச்சயமாக அடிக்க வருவீர்கள்.

அது யாதெனின், நான் வரும் 31ம் தேதி மாலை ஊதிய அறிக்கையை (ஹிஹி.. Salary Alert) வழக்கம் போல ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நிறைய ஒதுக்கீடுகள் செய்யவேண்டியதிருக்கிறது. ஒரு வழியாக அறிக்கைக் குறுஞ்செய்தியும் வந்து சேர்கிறது அந்த இடிச்செய்தியோடு. ஆம் ஐயா, மிகச்சரியாக பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. என்ன கூத்து இது? பாங்க் கடங்காரன் ஏதாவது செய்துவிட்டானா? எந்த பாக்கியும் வைக்கவில்லையே. அலுவலகத்தில் நிதித்துறையில் ஏதும் கோளாறு செய்துவிட்டார்களா? ஐயகோ என்று அலறிவிட்டு, சரி ஏதும் தவறுதான் நடந்திருக்கவேண்டும் நாளை அலுவலகம் போய் அறிந்துகொள்ளலாம் என்று ஆறுதலடைந்தேன்.

ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் போன் கால்கள், SMS, டிவி செய்திகள் என நாடே அல்லோலகல்லோலப் படுகிறது. முதலில் எனக்கும் நண்பர்களுக்கும்தான் இந்தப் பிரச்சினை என நான் நினைக்க, அடுத்த கொஞ்ச நேரத்தில் நாடு முழுதும் இந்தப் பிரச்சினை எனத் தெரிகிறது. அப்படி என்ன காரணம் எனக்கேட்க யாரோ சொல்கிறார்கள், 'ஐயா, அரசாங்கத்துக்கு ஏதோ ஒரு பெரும் நெருக்கடியாம். அதனால்தான் இந்த ஒரு மாதம் மட்டும் இப்படி 50 சதவீதத்தை மக்களிடமிருந்து எடுத்துக்கொள்ளலாம் என திட்டமிட்டுச் செய்திருக்கிறார்களாம். முன்னமே அறிவித்திருந்தால் பெரும் குழப்பம் நேர்ந்திருக்கும் எனவும், இந்த எதிர்பாராத காரியத்துக்காக அரசு வருந்துவதாகவும் அறிக்கை வந்துள்ளது' என்கிறார். அதன் பின் மக்கள் கொந்தளித்தார்களா? போராட்டம் ஏதும் நடந்ததா என்றெல்லாம் தெரியவில்லை. கனவு அதற்குள் முடிந்துவிட்டது.

இந்த மாதிரி ஏதும் நடந்தா என்னை தேடி வந்து உதைக்கமாட்டீங்க.?

***************

வலையுலகம் வந்து (நல்லா கவனிக்கவும் எழுத வந்து இல்ல) சுமார் இரண்டு வருடங்கள் கழிந்த இவ்வேளையில் 3 லட்சம் ஹிட்டுகளைத் தந்து, வெளியே சொல்லிக்கும் படியான எண்ணிக்கையில் ஃபாலோவும் செய்து ஆதரவளித்து வரும் அன்பு நண்பர்களனைவருக்கும் என் நன்றி.

****************

சுயபுகழ்ச்சிக்காக அல்லாது ஒரு விழிப்புணர்வுப் பகிர்தலுக்காக மட்டுமே இந்தச்செய்தி. சென்ற வாரம் அலுவலகத்தில் நடந்த ரத்த தான முகாமில் நானும் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தேன். நம்மைப் போல அல்லாமல் ஆஜானுபாகுவாக இருக்கும் நண்பர் ஒருவர் மட்டும் ரத்தம் கொடுத்து முடித்து படுக்கையிலிருந்து எழுந்தவுடன் மீண்டும் படுக்கையிலேயே 'சொய்ய்ங்' என விழுந்தது ஒரு சுவாரசியம். மனதில் எழுந்த குழப்பங்கள் காரணமாக இருக்கலாம்.

என்னுடையது O+. பரவலான வகை என்பதாலேயே முன்பு நான் அவ்வளவாக ஆர்வம் காட்டியதில்லை. ஆனால்..

"My blood is common. I don't think there will be demand for it" - That is why the demand for your type is greater than for rare types.

*****************

டிவியில் சில ரியல் எஸ்டேட் விளம்பரங்களைப் பார்க்கும் போது எனக்கு இப்படித் தோன்றுகிறது. இது நிஜமாக இருக்குமா என்று நீங்களே கூறுங்கள்.

'சென்னையிலிருந்து சில நூறு கிமீக்கள் தொலைவில் ஏதோ ஒரு கிளைச்சாலையின் அருகே சில ஏக்கர் நிலங்களை வாங்க வேண்டியது. கட்டம் பிரித்து மஞ்சள் கற்களை நடவேண்டியது. தெருக்கள் போல தோற்றமளிக்க ரெண்டு லாரி மணலை கொட்டி சமன்படுத்த வேண்டியது. ஏதோ ஒரு பாபா நகர் என்று பெயர்ப்பலகையை வைத்து மாலையை போட்டுவிடவேண்டியது. இதற்கு அப்புறம்தான் சுவாரசியமே. ஒரு அழகான டிவி காம்பியரை அழைத்துக்கொண்டு போய், அகேலா கிரேன் கொண்டு சும்மா சுற்றிச் சுற்றி படம் பிடித்துவிட்டு, சென்னையிலிருந்து 123 நிமிட பயணநேரம் (பந்தயக்காரில் போனால் அவ்வளவு நேரமாயிருக்கும்), 17 கிமீயில் ஒரு கல்யாணமண்டபம் இருக்கிறது (நாம் ஏதோ மாதம் ஒருவாட்டி கல்யாணம் செய்துக்கப்போவதைப் போல) அப்புறம் இஷ்டத்துக்கு.. 17 கிமீயில் உங்களுக்கு ஆட்டோ வசதி கிடைக்கும், 34 கிமீயில் ஒரு பப்ளிக் டாய்லெட் இருக்கிறது, 23 கிமீயில் ஒரு அடிபம்பு இருக்கிறது என்று அடித்துவிட்டு அரைகிரவுண்டு மூன்றே லட்சம்தான். முன்பதிவு செய்தால், பத்திரம் இலவசம், தங்கக்காசு இலவசம், கார், டிவி, பிரிட்ஜ், வாஷிங்மிஷின், கிரைண்டர், கம்யூட்டர்.. போன்ற நிச்சயப்பரிசுகள்'

.

பிரபல பத்து பதிவர்களுக்கு விழுகிறது குத்துகள்

1. போனில் எப்போ பேசினாலும் 'மெயில் படித்துக்கொண்டே.. சாப்பிட்டுக்கொண்டே.. கதை டைப் பண்ணிக்கொண்டே..' உனக்கு இவ்வளவு கவனம் போதும்டா என்பது போல பேசும் பரிசல்காரன் கையில் மாட்டினால் விழும் முதல் குத்து.. (அவ்வப்போது பதிவுலகில் பத்தோமேனியா, குத்தோமேனியா என்று எதையாவது உருவாக்குவதற்காக எக்ஸ்ட்ராவாக ஒரு ஸ்பெஷல் குத்து)

2. சாய்ங்கால நேரமா கூப்பிடுறாங்களேன்னு அரக்கப்பறக்க பீச்சுக்கோ ஹோட்டலுக்கோ கசங்கிய சட்டையில், முடி கலைந்து, தாடியோடு பக்கி எஃபெக்டில் நாம் போய் சேர்ந்த பின்பு நிதானமாக கஞ்சி போட்டு அயர்ன் செய்த தும்பைப்பூ வெள்ளை ஜிப்பாவில் ஈ என்று இளித்தபடி ஃபிரெஷ்ஷாக வந்து கடுப்பேற்றும் அப்துலுக்கு விழுகிறது இரண்டாவது குத்து.. (எல்லாவற்றிலும் தாராள பிரபு என்பார்களே என்று அவர் கையிலிருக்கும் நாம் ரொம்ப நாளாக வாங்க ஆசைப்பட்ட புத்தகத்தை ஏக்கத்தோடு பார்த்தால் புக்கை டாஷ்போர்டில் போட்டு பூட்டிவிட்டு ‘அப்புறம்’ எனும் சந்தர்ப்பங்களுக்காக விழுகிறது எக்ஸ்ட்ரா குத்து)

3. எப்போ எங்கே கூப்பிட்டாலும் 'ஆஃபீஸுக்கு போகணும், அம்மா பால் வாங்கச் சொன்னாங்க, பப்லுவுக்கு பானிபூரி வாங்கணும்..' என்று எஸ்கேப்பாகும் சகா கார்க்கிக்கு விழுகிறது மூன்றாவது குத்து.. (தோழிக்கு சுடிதார் வாங்கப்போவது போன்ற ஸ்பெஷல் காரணங்களுக்கு ஸ்பெஷல் குத்து ஒன்று)

4. உணர்வதுதான் முக்கியம், கூடிச் செல்வோம் வாருங்கள் என்றால் இன்னும் பிகு பண்ணிக்கொண்டிருக்கும் நர்சிம்முக்கு ஓங்கி விழுகிறது அடுத்த குத்து.. (சவுண்டு விடுதல் போன்ற ஆஃபீஸ் மேனரிஸங்களை அவ்வப்போது நண்பர்களிடமும் காண்பிப்பதற்காக விழுவது ஒரு ஸ்பெஷல் குத்து)

5. 'யு நோ.. எங்க வீட்ல சிக்கன் பிரியாணியும், இஞ்சித் துகையலும் ரொம்ப நல்லாப் பண்ணுவாங்க..' என்று நாக்கில் ஜலம் வரவைத்துவிட்டு, 'வீட்டுக்கு வாங்களேன், இந்த சண்டே' என்று சொல்லமாட்டாரா என் மூஞ்சியையே பார்க்க வைக்கும் வெண்பூவுக்கு விழுகிறது மற்றொரு குத்து.. (கையை மோந்து பாக்கறீங்களா என ஆதாரமும் காண்பிக்கும் சமயங்களுக்காக ஒரு எக்ஸ்ட்ரா குத்து)

6. 'விகடன்ல கதை வந்துருக்கு, கல்கியில வந்துருக்கு, இவுங்க என்னோட புக்க போட்டாங்களா? அடுத்து அவுங்க போடப்போறாங்க. நாளைக்கு ஜெயாடிவில வர்றேன் யு நோ. அப்புறம் கிழக்குல இன்னைக்கு காலையில கூப்பிட்டு..' என்று எப்போதும் வயித்தெரிச்சல் நியூஸ்களை முதல் ஆளாக கூப்பிட்டு சொல்லும் கேபிள்சங்கருக்கு விழுகிறது ஒரு குத்து.. (நீங்களும் நல்லாத்தான் எழுதறீங்க, இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணினா பெரியாளா வருவீங்க என்று அப்படியே மருந்தும் போடுவதற்காக விழுவது எக்ஸ்ட்ரா குத்து)

7. பதிவில், மெயிலில், குழுமத்தில் கலாய்ப்பது பத்தாதென்று குரல் அடையாளம் கண்டுபிடிக்கத் தெரியாத ஏதோ ஒரு ஃபோபியா இருக்கிறது என்று தெரிந்தும் போனில் யார் யாரையோ போல் பேசி கலாய்க்கும் குசும்பனின் கரிய மூக்கில் ஓங்கி விழுகிறது அடுத்த குத்து.. (நல்ல அரசியல் பார்வை இருந்தும் அவற்றை பகிர்ந்துகொள்ளாமல் கலாய்த்தலே கதியென இருப்பதற்காக விழுவது எக்ஸ்ட்ரா)

8. பதிவுக்கும் வர்றது கிடையாது, பின்னூட்டமும் போடறது கிடையாது. போனும் கிடையாது, மெயிலும் கிடையாது. ஆனால் நேர்ல பார்க்கும் போது மட்டும் 'நீதான் செல்லம் என் ஆதர்சம்' என்று பாசம் பொழியும் அதிஷாவுக்கு விழுகிறது ஒரு வலுவான குத்து.. (காரணமே இல்லாவிட்டாலும் அந்த அழகிய வழுக்கை மண்டைக்காக ஒரு எக்ஸ்ட்ரா குத்து)

9. கமர்ஷியல் எழுதாம பிரபலமாவதா? சான்ஸே இல்லை என்ற நினைப்புக்காக வெட்கம் வரவைத்து கிட்டத்தட்ட எல்லா பதிவுகளையுமே சமூக அக்கறையுடன் எழுத முடியும் என்று காட்டிக்கொண்டிருக்கும் ஈரோடு கதிருக்கு விழுகிறது வீங்கும்படியாக ஒரு குத்து.. (வயதில் மூத்திருந்தும் பதிவுலகில் இளைஞர்களான எங்களை சீனியராக்கி ஒதுக்கி புதிய பதிவுலகக் குழுமத்தை உருவாக்கிய சாதனைக்காக விழுவது எக்ஸ்ட்ரா குத்து)

10. 'ஜெமோவின் மத்தகம் படிச்சீங்களா? நாஞ்சிலின் சூடிய பூ சூடற்க படிச்சீங்களா? மனோஜின் புனைவின் நிழல் படிச்சீங்களா? ஜீ முருகன் படிச்சீங்களா? பிரபஞ்சன் படிச்சீங்களா? எழில்வரதன் படிச்சீங்களா? எம்ஜி சுரேஷ் படிச்சீங்களா?..' என்று கேட்டு கேட்டு அதன் உள்ளர்த்தமாய் ..நீயெல்லாம் கதையெழுதறேன்னு கீ போர்டை தூக்கிட்டு அலையுறே.. ன்னு கேட்காமல் கேட்கும் செல்வேந்திரனுக்கு விழுகிறது ஒரு கும்மாங்குத்து.. (அவ்வப்போது ஏதாவது ஒரு கதையை விளக்கவும் செய்து நம்மை குற்ற உணர்வுக்கு ஆளாக்கச் செய்யும் தருணங்களுக்காக விழுவது எக்ஸ்ட்ரா குத்து)

இன்னும் நிறைய குத்துகள் பாக்கியிருக்கின்றன, இருப்பினும் எனது ஸ்பெஷலைசேஷன் தங்கமணி குத்து பதிவை போடவிடாமல் முந்திக்கொண்டு குத்திவிட்ட வடகரை வேலன் மூஞ்சியில் அதற்காக ஒரு சிறப்புக் குத்தை குத்திவிட்டு.. இதுக்கு மேலும் இழுத்துக்கொண்டு போனால் விழப்போகும் உங்கள் குத்துக்கு பயந்து பத்தோடு எஸ்கேப்புகிறேன். மீ பாவம்.!

பனிக் கத்தி

அமானுஷ்யமான ஒரு குரலால் திடுக்கிட்டு விழித்தேன். என்ன சத்தம் அது? எப்போதும் எனது தலையணையருகே என் மொபைல் போன் இருக்கும். தூங்கும் போது எப்போதும் மொபைலை சைலண்டில் போட்டுவிடுவேன். எழுந்த பிறகு மிஸ்டு கால்களைப் பார்த்து தேவைப்பட்டால் பேசிக்கொள்வேன். என்னைத் தெரிந்தவர்கள் யாரும் ஒருமுறைக்கு மேல் என்னை அழைக்கமாட்டார்கள். ஆயினும் மொபைல் போனை அருகில் வைத்துக்கொள்வதற்குக் காரணம் நேரம் பார்த்துக் கொள்ளவே. சரியாக தூங்கும் நேரம், காலையில் விழிக்கும் நேரம், இடையில் எக்காரணம் கொண்டும் விழித்தால் அப்போதும் உடனே எனக்கு நேரம் பார்த்துக்கொண்டாக வேண்டும். அப்படியொரு பழக்கம். என்ன சத்தம் அது? வயிற்றுக்குள் என்னவோ செய்தது அந்தச் சத்தம். இப்போது நேரம் என்ன? இருளில் துழாவி பக்கத்திலிருந்த இன்னொரு தலையணைக்குள் நழுவியிருந்த போனை எடுத்து நேரம் பார்த்தேன். பளீரென்ற நீல நிறத்தில் மணி சரியாக இரண்டு என்பதைக் காட்டியது. அதன் வெளிச்சம் கண்களைக் கூசச்செய்ததில் டிஸ்பிளேவை மறுபக்கம் திருப்பியபடி படுக்கையிலேயே எழுந்து அமர்ந்தேன்.

இரவு விளக்கு எரியவில்லை, மின் விசிறியும் நின்று போயிருந்தது. குளிர் காலமோ, வெயிற்காலமோ மின்விசிறி இல்லையென்றால் குப்பென்று வியர்த்துவிடுகிறதுதான். தொட்டிற்பழக்கம். என்ன சத்தம் அது? என்ன ஒரு அமானுஷ்யம்? சிலிர்த்தது எனக்கு. ஒரு வேட்டை நாயின் அடிவயிற்றிலிருந்து துவக்கத்தில் கிளம்பும் உறுமலைப்போல இருந்தது அது. நிச்சயம் வீட்டின் பின் பக்கமிருந்துதான் வருகிறது.

கொஞ்சம் கூட வெளிச்சமில்லாத இரவு. என் வீடு புதிதுதான், ஆனால் பழங்கால பாணியில் நீளவாக்கில் சிறிய முன்னறை, ஒரு ஹால், அடுத்து ஒரு படுக்கையறை, அடுத்து சமையலறை என அமைந்திருக்கிறது. சமையலறைக்கதவைத் திறந்தால்தான் பின்முற்றத்துக்குச் செல்லமுடியும். அது மொத்தமாக என் வீட்டிற்கு வலப்புறமுள்ள இரண்டு வீடுகளுக்கும் சேர்த்து கட்டப்பட்ட சுற்றுச்சுவருடன் அமைந்திருக்கும். இடது புறம் காலி மனையாகையால் சுற்றுச்சுவர் வீட்டின் இடது சுவற்றுடன் முடிந்திருக்கும். உட்புறச்சுவரோரம் ஒரு பெரிய செம்பருத்திச் செடி. பின்முற்றம் தளமிடப்பட்டு துவைக்க, புழங்க, மாலை நேரங்களில் பேசிக்கொண்டிருக்கவென ஒரு வசதியான இடம். சுற்றுச்சுவரோ மார்பளவு உயரத்தில் தேவைப்பட்டால் ஏறிக்குதித்துவிடும் படியே அமைந்திருந்தது. சத்தம் இப்போது இன்னும் அதிகமாகியிருந்தது.

அந்தச் சத்தம் இது வரையில் என் வாழ்க்கையில் நான் கேட்டிராத வகையில் அமானுஷ்யமாக இருந்தது. அது ஒரு விலங்கினுடையதா? இல்லையா? இன்னும் வேகமாக மூச்சிரைப்பதைப்போல இருந்தது. நான் எப்போதும் எதற்கும் அஞ்சியவனில்லை. படுக்கையறையில் இருக்கமுடியவில்லை. பயம் ஒரு பனிக் கத்தியைப்போல முதுகில் ஊர்ந்தது. சமையலறைக் கதவுகளைத் திறந்து பார்த்துவிடலாமா? திறக்காமல் சமையலறைக் கதவுகளுக்கு உட்புறமாக நின்றுகொண்டு அந்தச் சத்தத்தைக் கேட்கவே உடல் சிலிர்த்தது. ஒலி இன்னும் அதிகமாகி ஒரு சிறிய ஓலமாக மாறியது. அங்கு நிற்கவே பயந்து மீண்டும் படுக்கையறைக்குள் வந்து சமையலறைக்கும், படுக்கையறைக்கும் நடுவேயிருந்த பயன்படுத்தப்படாது இருந்த இன்னொரு கதவையும் சேர்த்து சார்த்திக்கொண்டேன்.

அந்த ஒலி பல்வேறு வடிவங்களில் உருவெடுத்தது. உறுமல்.. ஓலமாகி, இப்போது முதுகுத்தண்டைச் சில்லிடச்செய்யும் இன்னொரு விலங்கோடு கூடிய மோதலாக மாறியிருந்தது. அது சுவரேறிக் குதித்திருக்கும் இரண்டு நாய்களின் சண்டையோ? இல்லை, அது நாய்களின் சத்தமேயல்ல. வேறு ஏதும் விலங்கின் சத்தமா? இல்லவேயில்லை. இதுவரை இந்த ஓலத்தைக் கேட்டதேயில்லை. நெஞ்சு தடக் தடக்கென்று அடித்துக்கொண்டது. ஓநாயின் குரல் இப்படியிருக்குமோ? ஓநாய்கள் எப்படி இந்த நகரத்துக்குள்.? அந்த பயத்திலும் தலையிலடித்துக்கொண்டேன். நானா பயந்துகொண்டிருக்கிறேன்? அதுவும் வெறும் குரல்களுக்காகவா.? கொஞ்சம் வெட்கமாக இருந்தது. முன்வாசல் வழியாக கேட்டைத் திறந்துகொண்டு இடது புற காலிமனையிலிருந்து டார்ச் அடித்துப்பார்த்தால் என்ன? வேண்டுமானால் வலப்புற வீட்டிலிருந்து ராஜுவை எழுப்பலாம். அவனுக்கும் இந்தச்சத்தம் கேட்காமலா இருக்கும்.?

எதுவோ சமையலறை வெளிக்கதவில் மோதுகிறதோ? இல்லை, கதவில் இல்லை. சுற்றுச் சுவரிலும், வீட்டுச்சுவரிலும் மோதிக்கொள்ளும் திண்ணென்ற உணர்வு. ஆனால் கிறீச்சிடும் சத்தமோ குறையவில்லை. இதயம் படபடக்க வியர்த்துக்கொட்டியது. இப்படியொரு அதீத அமானுஷ்யத்தன்மையை இதற்கு முன்னால் சந்தித்திருக்கிறோமா? இல்லை. வெளியே செல்லும் திட்டத்தைத் தவிர்த்துவிட்டு கொஞ்சம் திறந்திருந்த இடப்புற படுக்கையறை சன்னலை அழுத்தி மூடி தாளிட்டுவிட்டு படுக்கையில் படுத்து போர்வையை இழுத்து மூடிக்கொண்டேன். மணி 2.40. அதன் பின் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. அடிவயிற்றில் பயம் ஒரு பாம்பைப்போல ஊர்ந்துகொண்டிருக்க அந்தச் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது.

காலையில் கண்விழித்து சாவகாசமாக மணியைப்பார்த்த போது காலை மணி 7.50. விருட்டென நள்ளிரவு சம்பவம் நினைவுக்கு வர சடாரென எழுந்து சன்னல் , நடுக்கதவுகளைத் திறந்தேன். பின்னர் அடுக்களையிலிருந்து பின் கதவுகளைத் திறந்துகொண்டு மெதுவே வெளியே வந்தேன். இங்கேயாயிருந்தா அவ்வளவு பயங்கரமான ஒலிகள் வந்துகொண்டிருந்தன.? வழக்கம் போலத்தான் இருந்தது அந்த இடம். தரையை கவனித்தேன். ச்ச்ச்ச்ச்ச்.. சில மெல்லிய ரத்தக்கோடுகள் இருந்தன, சுவரின் அடிப்பகுதிகளிலும் ரத்தம் மிகச்சிறிய அளவில். இன்னும் கவனித்த போது ஒற்றைத்தூணின் பின் புறம் ஒன்றும், செம்பருத்திச்செடியின் வேர்ப்பக்கத்தில் ஒன்றுமாக இரண்டு அணில்கள் கோரமாக கிழிபட்டு இறந்துகிடந்ததைப் பார்த்தேன்.

.