சாரு புத்தக வெளியீட்டை முன்னிட்டு நிகழ்ந்த பதிவர் சந்திப்பு

இரண்டு நாட்களாக காத்திருந்தும் கலந்துகொண்ட யாரும் பதிவு எழுதுவதைப்போல தெரியாததால் நாமே எழுதிவிடுவது என்று முடிவு செய்துவிட்டேன். பின்னே 'ஏன் எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள், நடந்தது என்ன?' என்று துப்பறியும் பாணியில் கேட்கும் நண்பர்களின் தொல்லையை எப்படி நிறுத்துவது.?

சீக்கிரமே கிளம்பிவிட்டாலும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதமாகவே செல்ல நேர்ந்தது. எதிர்பாராத மழை வேறு. ஒரு வாசகனாக யாருமே அழைக்காமலேயே 'புக் பாயிண்ட்' புத்தக வெளியீட்டிற்கு இதற்கு முன்னரும் சில தடவைகள் சென்றிருந்தாலும் இந்த முறை நர்சிம்மின் அழைப்பினால் கொஞ்சம் கெத்தாகவே சென்றேன். அவ்வாறு முன் சென்ற சமயங்களில் பெரும்பாலும் அரங்கம் நிறைந்திருக்காது, நிச்சயம் உட்கார நாற்காலி கிடைக்கும். (ஒருமுறை மனுஷ்யபுத்திரனை மடக்கிப்பிடித்து ஆட்டோகிராப் வாங்கியிருக்கிறேன்) இந்த முறை கூட்டத்திற்கு சினிமா வேல்யூ இருந்ததாலோ அல்லது திரண்டு வந்த பதிவர்களாலோ அல்லது 'சாருநிவேதிதாவின் பத்து புத்தகங்கள் ஒரே நேரத்தில்' என்ற பிரமாண்டம் காரணமாகவோ கூட்டம் நிரம்பி வழிந்தது.

நான் சற்று நனைந்திருந்தேன். சரியாக நான் நுழைகையில் புத்தக வெளியீடு துவங்கியிருந்தது. இந்திரா பார்த்தசாரதி வெளியிட பிரபஞ்சன், ந.முத்துசாமி, சுதேசமித்திரன், சிவகாமி, தமிழச்சி தங்கபாண்டியன், அமீர், சசிக்குமார் பெற்றுக்கொள்ளத்துவங்கினர். கிளம்பிய ரயிலில் ஓடி வந்து ஏறுவதைப்போல மதன் மிகச்சரியான நேரத்தில் வந்து மேடையேறி அவரும் பெற்றுக்கொண்டார். பின்னர் முதலில் 'மதுமிதா சொன்ன பாம்புக்கதைகள்' புத்தக மதிப்புரை தர சுதேசமித்திரன் மைக்கைப்பிடித்தார். சில வருடங்களுக்கு முன்னர் சென்னையில் நிகழ்ந்த ஒரு விழாவில் சுதேசமித்திரன் ஆற்றிய உரையில் மயங்கித்தான் நானும் கண்ணனும் அவர் நட்புக்காக 'அது'வாக அலைந்தோம். இன்னும் கிடைத்தபாடில்லை. அதனால்தான் சுதேசமித்திரன் பேசும்முன்னர் சென்றிட வேண்டும் என ஆவலோடு சென்ற என்னை ஏமமற்றிவிட்டார், பேச்சு சுகப்படவில்லை. அடடா.. டாபிக் திசைமாறிப் போகிறதே.!

தலைப்பைக்கவனியுங்கள், பதிவர் சந்திப்பு என்று கூறிவிட்டு புத்தக வெளியீடு பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். சாருவின் புண்ணியத்தில் காபி, சமோசா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் நான் தாமதமாகி விட்டதால் காபிதான் கிட்டியது, சமோசா கிட்டவில்லை. மதியம் வேறு சரியாக சாப்பிடாததால் பசி வயிற்றைக்கிள்ளியது. கூட்டத்தை நோட்டமிட்டேன். அட நம்ம முரளிக்கண்ணன்தான் நிகழ்ச்சித்தொகுப்பாளர். அவரை இழுக்கமுடியாது. நர்சிம் பிரதானமாக அனைவரையும் கவனித்துக்கொண்டிருந்தார். அவரிடம் போய் ஏதாவது சமோசா கிடைக்குமா? என்றேன். 'லேட்டா வந்ததுமில்லாமல் சமோசாவா? வாயிலேயே குத்திருவேன்' என்றார்.

பின்னர் லக்கி, அதிஷா பக்கம் ஒதுங்கி ஹாய் சொன்னேன். இன்னும் பல பதிவர்களும் தீவிரமாக நிகழ்ச்சியை கவனித்துக்கொண்டிருந்தனர். பசிக்கிறதே, வெளியே போக வேண்டுமே.. அதெப்படி தனியாக போவது? கூட நாலு பேரையும் எழுப்பி அழைத்துக்கொண்டு போனால்தானே அவன் தமிழன். (சாருவிடம் அடுத்தமுறை சிக்கும் போது மொத்தப்போகிறார்) ஒருவழியாக நம் தானைத்தலைவர் அப்துல்லாவையும், வெண்பூவையும் கூட்டத்தில் கண்டுபிடித்து குறுஞ்செய்தி மூலமாக அவர்களை வெளியே அழைத்தேன். அப்துல்லா என்ன நினைத்தாரோ வெண்பூ பக்கத்தில் இருந்ததால் நான் போட்ட 'ஸ்நாக்ஸ்' கொக்கி வேலை செய்தது. வெண்பூ அப்துலை தள்ளிக்கொண்டு வெளியே வந்தார்.


மற்ற பிரபலங்களின் பேச்சை தவறவிடுகிறோம் என்ற வருத்தம் இருந்தாலும் எங்களுக்கு வேறு வழியில்லாமல் போனது. வெளியே வந்த பிறகுதான் தெரிந்தது பக்கத்தில் 'கொறிப்புகளு'க்கு வழியில்லை என்று. பேசிக்கொண்டே நடந்ததில் நீண்ட தூரம் வந்துவிட்டதும் பசிக்கு வழியில்லாததால் அப்துல் காரை வரவைத்து ஒரு பெரிய உணவு விடுதிக்கு அழைத்துப்போய் சாப்பிடவைத்தார். ஜாலியாக பலரையும் கேலி செய்து மகிழ்ந்தவாறே நேரம் போவதே தெரியாமல் சிரித்துப்பேசிக் கொண்டிருந்தோம். துணைக்கு போனில் குசும்பனையும் அழைத்துக்கொண்டோம். அவரது தாயாருக்கு உடல்நலமில்லாததால் தற்போது சென்னையில்தான் உள்ளார். தாயார் உடல்நிலை குறித்து விசாரிக்கும்போது தற்செயலாக அவரது வயதைக்கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் :'அவருக்கு 60 வயதாகிறது, நான் ரொம்ப லேட்டாக பிறந்தேன்'. மனிதர் வாயைத்திறந்தாலே கேலி விளையாடுகிறது.

ஒருவழியாக தாமதமாகி விட்டதால் நேரே 'கன்ட்ரி கிளப்' போவதாய் முடிவு செய்தோம். அங்கே எங்களுக்கு முன்னமே காத்திருந்த கேபிள் சங்கருடன் இணைந்து அவர் சினிமாக்களில் நடித்த கதைகளை சுவாரசியமாக கேட்டுக்கொண்டே கா.......த்திருந்தோம். கடைசியாக அனைவரும் வந்து விருந்து துவங்க 11 மணியாகிவிட்டது. விட்டால் தூங்கியிருப்பேன். இருப்பினும் ஏதோ ஒன்று (அதுதான் உங்களுக்குத் தெரியுமே!) என்னை தூங்காமல் பிடித்துவைத்தது. சாருவுடன் நர்சிம் அறிமுகம் செய்துவைத்தார். நிறைய கூட்டமிருந்ததால் பேச முடியவில்லை, மேலும் நமது நோக்கம் பேசுவதுமில்லையே. பிரபஞ்சன், சுதேசமித்திரன் ஆகியோர் கலந்துகொண்டதும் ஆச்சரியமாக இருந்தது. 'காக்டெய்ல்' எழுதிய சுதேசமித்திரன் எப்படி மதுவருந்துகிறார் என்று அருகிருந்து பார்க்கும் ஒரு வாய்ப்பு. எந்த தயக்கமுமின்றி அனைவரும் கலகலப்பாக ஆரம்பித்துவிட்டனர். ரமேஷ் வைத்யா வழக்கம் போல அனைவரையும் கலாய்த்து மகிழ்ந்தார். ஸ்ரீ உட்பட மேலும் பல பதிவர்களைக்காண முடிந்தது. பெண் வீடும் இல்லாமல் மாப்பிள்ளை வீடும் இல்லாமல் சிலர் இருந்ததையும் அறிய முடிந்தது. அனைவரையும் நர்சிம் அன்போடு உபசரித்து மகிழ்ந்தார். பாதிக்கு மேலாக மனுஷ்யபுத்திரனும், புனைவின் நிழல் மனோஜும் வந்து இணைந்துகொண்டனர்.

பல விறுவிறுப்பு, கிறுகிறுப்புகளுடன் 2 மணி வாக்கில் விருந்து நிறைவுக்கு வந்தது. அனைவரையும் வழியனுப்பி வைத்துவிட்டு நான், அப்துல், நர்சிம், முரளி, அதிஷா ஆகியோர் மட்டுமே எஞ்சியிருந்தோம். அதற்குள் நர்சிம்மின் கார் டிக்கியிலிருந்த இரண்டு சாருவின் புத்தகங்களை 'லவுட்டி'யிருந்தேன். கிளம்ப ஆயத்தமானபோது நர்சிம் கையில் எஞ்சியிருந்த பார்சலைப்பார்த்த அப்துல் என்னைப்பார்த்து கண்ணசைத்தார். நர்சிம்மை காரில் தூக்கிப்போட்டுக்கொண்டுமிச்சமிருந்த நாங்கள் அப்துல் வீட்டுக்குப்பறந்தோம். மீண்டும் நாங்கள் உறங்குவதற்குள் விடிந்துபோயிருக்கலாம்.. (கவிதைத்தனமா முடிச்சிருக்கேன்னு நீங்க சொல்லவேண்டாமா? அதான் இப்பிடி.!)


டிஸ்கி : இதை எழுதிவைத்தபிறகுதான் தெரிகிறது, முரளியும், நர்சிமும் இப்போதுதான் சந்திப்பு குறித்தும், புத்தக வெளியீட்டு விழா குறித்தும் பதிவிட்டிருக்கிறார்கள் என்று. அதற்காக விரல் வலிக்க நான் எழுதியதை பதிவேற்றாமல் இருக்கமுடியுமா? இந்தப்பதிவில் சந்திப்புகளை மட்டுமே சொல்ல முயன்றுள்ளேன். சந்திப்பு குறித்து மேலும் தெரிந்துகொள்ள முரளிகண்ணனிடம் போகலாம். புத்தக வெளியீட்டில் நிகழ்ந்தவற்றை தெரிந்துகொள்ள நர்சிம்மிடம் செல்லுங்கள்.

.

9 comments:

\\பெண் வீடும் இல்லாமல் மாப்பிள்ளை வீடும் இல்லாமல் சிலர் இருந்ததையும் அறிய முடிந்தது.\\

தாமிரா டச்

 

//இருப்பினும் ஏதோ ஒன்று (அதுதான் உங்களுக்குத் தெரியுமே!) என்னை தூங்காமல் பிடித்துவைத்தது.//

எப்படினாலும் அதே 90 தான் அதுக்கு இவ்ளோ பில்டப்பா அண்ணே

 

ஜூப்பரு!

மேடை பேச்சின்போது நீங்கள் உணவகத்தில் இருந்தது பாராட்டதக்கது!

கண்ணனை அழைத்து செல்லவில்லையா!
அவருக்கு சாரு ரொம்ப பிடிக்குமே!

 

அந்த பார்சல்ல என்ன இருந்தது...?

 

நான் அங்கே வந்ததே பதிவர்களை சந்திக்கத்தான்.. அது சிறப்பாக நடந்ததில் சந்தோஷமே..

 

நன்றி முரளி.!
நன்றி அத்திரி.!
நன்றி வால்.!
நன்றி கும்க்கி.!
நன்றி பரிசல்.!
நன்றி வெண்பூ.!

இன்னாபா இது கூட்டமே இல்ல, ஏதோ சாரு பேரு போட்டா பரபரப்பாயிரும்ன்னாங்க..

 

//இன்னாபா இது கூட்டமே இல்ல, ஏதோ சாரு பேரு போட்டா பரபரப்பாயிரும்ன்னாங்க//

:-)))))))

 

இப்படியெல்லாம் கூட நிகழ்ச்சிகள் நடை பெறுகிறதா? ஏதோ ஒரு புதிய உலகத்திற்குள் வந்திருக்கிறேன்...........