ஒரு வழியாய் தமிழ்மண விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது. இன்ப அதிர்ச்சியாய் ‘சிக்ஸ் சிக்மா: ஓர் அறிமுகம்’ என்ற எனது பதிவு அதற்குரிய பிரிவில் முதலிடத்தை வென்றுள்ளது. சில முக்கிய பதிவர்கள் போட்டியில் கலந்துகொள்ளாமல் இருந்தது என் போன்றோர் வெல்ல வாய்ப்பாக அமைந்திருக்கலாம். இருப்பினும் உண்மையைச் சொல்வதாக இருந்தால் முதலிரண்டு இடங்களை விடவும் டாப் 10ல் ஒரு பதிவாவது, குறிப்பாக நகைச்சுவைப்பிரிவில் வரவேண்டும் என்றே நான் விரும்பினேன். அது நிகழவில்லை. இருப்பினும் குசும்பன், சுகுணாதிவாகர், டுபுக்கு, அபிஅப்பா, கார்க்கி போன்ற எக்ஸ்பர்ட்டுகளிடமே தோற்றிருக்கிறேன் என்பது பெருமையே. அந்த இடத்தை அடைய திறனும், உழைப்பும் இன்னும் தீவிரமாக வேண்டும் என்பதையும், செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதையும் உணரமுடிகிறது. மேலும் டாப் 10ல் இரண்டல்லது 3 இடங்களையும் பிடித்த பரிசல்காரன், அப்துல்லா, இராம், ராமலக்ஷ்மி, புதுகைத்தென்றல், ரிஷான், உண்மைத்தமிழன் போன்ற பல பதிவர்களையும் பொறாமை வழியும் கண்களோடு பார்த்துகொள்கிறேன். அதிலும் டாக்டர் புரூனோ மூன்று பிரிவுகளிலுமே முதலிடங்களை வென்று சாதனை படைத்து பிரமிக்கவைக்கிறார்.
தமிழ்மணம், முதல் பத்து இடங்களை வென்றவர்கள், பங்கு கொண்டவர்கள், வாக்களித்தோர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். நன்றி.
ஆஸ்கர் ரஹ்மான்
சரியான காலத்தை தவறவிட்டாலும் சில முக்கியவிஷயங்களை பகிர்ந்துகொள்ளாமல் அடுத்து பயணிக்கமுடியாது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ ஒரு சிறந்தபடம் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை எனினும், இந்தியாவில் உள்ள அவலங்களை மட்டுமே படைப்புகளாக்குவதிலும், அதையே சிறப்பானவை எனக்கொண்டாடுவதிலும் எனக்கு உடன்பாடில்லை. மேலும் களம் தவிர்த்து இது முழுக்க முழுக்க ஒரு ஆங்கிலப்படமே. ஆகவே ‘டைட்டானிக்’ 11 விருதுகளை வாங்கியதில் என்ன மகிழ்ச்சியோ அதே மகிழ்ச்சிதான் ‘ஸ்லம்டாக்’ 8 விருதுகளை வாங்கும் போதும் ஏற்பட்டது. ஆனால் ஒரு பெரிய கொண்டாட்டத்துக்கு உரிய செய்தி ஏதெனில் அதில் டெக்னிகல் பங்களிப்புகளைச் செய்த நமது கலைஞர்கள் மூன்று ஆஸ்கர்களை வென்றதுதான். அவர்கள் எந்த பிற தேச கலைஞர்களுக்கும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதை உலகறிய ஓங்கி ஒலித்துவிட்டு வந்தது, நம்மை பெருமை கொள்ளச்செய்தது. நமது ஒளிப்பதிவாளர்கள் ஆங்கிலப்படங்களில் பணியாற்றினால் வருடாவருடம் ஆஸ்கரை நமக்கு ரிஸர்வ் செய்து விட வேண்டியதுதான். (அனைத்து தொழில்நுட்பங்களிலும் மிகச்சிறப்பாகவே இருக்கிறோம் என்றுதான் நான் நினைக்கிறேன், கதை மற்றும் இயக்கத்தைத்தவிர.) இந்த அரிய ஆரம்பத்தினை செய்துவந்த ஏஆர் ரஹ்மான், ரசூல் பூக்குட்டி இருவருக்கும் நாம் நமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இணைய இணைப்பு
அலுவலகத்தில் சமீபத்தில் சந்தித்திராத வகையில் நம்மை ‘மிதிச்சு நவுட்டி’க்கொண்டிருப்பதால் கடந்த சில நாட்களாக இணையத்தின் அருகில்கூட வர இயலவில்லை என்பதை அறிந்திருப்பீர்கள். மேலும் சில மாதங்களுக்கு இந்த இடைவெளி நீண்டு செல்ல வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் துன்பத்திலும் ஒரு நற்செய்தியாய் வீட்டுக்கு ஒருவழியாய் இணைய இணைப்பு வந்து சேர்ந்துவிட்டது. ஆகவே மாலை நேரங்களில் மட்டும், ரமாவின் அனுமதி கிடைத்தால் தொடர்ந்து இயங்க வாய்ப்பிருக்கிறது. இந்த சிறிய இடைவெளியைக்கூட பொறுத்திருக்கமுடியாமல் தொலைபேசியிலும், மெயிலிலும் வந்து விசாரித்த அன்பு நெஞ்சங்களுக்கும் (நான் எதிர்பார்த்து ஒரே ஒருவர்தான் இன்னும் விசாரிக்கவில்லை, அவரே பின்னூட்டத்தில் ஒப்புக்கொண்டுவிடவும். இல்லாவிட்டால் நானே பெயரைச் சொல்லிவிட நேரும். ஜாக்கிரதை.!), சில பல காரணங்களுக்காக தொடர்ந்து என் பதிவுகளுக்கு லிங்க் கொடுத்து பெருமைசெய்யும் அன்பு உள்ளங்களுக்கும் எனது மனம் கனிந்த நன்றி.
அனுஜன்யா
டிஸ்கி :
ஒரு வேளை இரவுகளில் தொடர்ந்து பதிவுகள் படையெடுக்கலாம். சில தலைப்புகளை முன்பே தருகிறேன்.. சும்மா ஜாலிக்காக.. யாராவது காப்பியடிச்சீங்கன்னு தெரிஞ்சது தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு.! ‘செல்வேந்திரனுக்காக..’ ‘குறும்படம் எடுப்பது எப்படி?-இறுதிப்பகுதி’ ‘எஸ்.. 5எஸ்’ ‘சொல்லாத வார்த்தைகள்’ ‘கையளவு மொக்கை’ ‘ரமா எழுதும் கடிதம்’..... எதை முதலில் எழுதலாம் என நீங்களே சஜஸ்ட் பண்ணுங்கள்.
.




