தொழிற்துறையில் கடந்த சுமார் ஒரு நூற்றாண்டாக குவாலிடி என்ற ஒரு துறை உருவாகி, வளர்ந்து, பிறவற்றை வளர்த்து, பிராண்டி, முக்கியத்துவம் பெற்று, இன்றியமையாததாகி, இன்று விஸ்வரூபமெடுத்து திணறி, திணற வைத்துக் கொண்டிருக்கிறதே..
அப்படி என்ன அவசியம் இந்த குவாலிடிக்கு? குவாலிடி (Quality -தரம்) என்றால் என்ன?
சிம்பிள்... நுகர்வோர் (End user) பயன்படுத்த இயலாத ஒரு பொருள் உருவாகிவிட்டது என்றால் அங்கே குவாலிடி இல்லை என்று அர்த்தமாகிவிடுகிறது. இதேதான் ஒரு பொருள் என்றல்லாது ஒரு சேவை என்று வந்தாலும் திருப்தியற்ற சேவையில் குவாலிடி இல்லை என்றாகிறது. இதனால் என்ன.. அந்தப் பொருளைத் தூக்கிப்போட்டு விட்டு வேறு வாங்கிக்க வேண்டியதுதான் என்கிறார் ஒருவர். தயாரிப்பவருக்கே அது தெரியுமே.. சொன்னால் அவங்களே அடுத்து கவனமா இருந்துக்க மாட்டாங்களா என்கிறார் இன்னொருவர்.
பிறகு ஏன் இப்படியொரு துறை? ஏன் இத்தனை போராட்டம்?
சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் வேகமெடுக்கத்துவங்கிய எஞ்சினியரிங் இப்போது வரலாறு முன்னெப்போதும் கண்டிராத வேகத்தையும் , முன்னேற்றத்தையும் அடைந்திருக்கிறது. இன்னும் செல்லப்போகும் தூரம் கற்பனைக்குள் அடங்காது. சில ஐந்தாண்டுகளுக்கு முன்னர் கட்டிடம், எந்திரவியல், மின்னியல் என்றிருந்த எஞ்சினியரிங் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையத் துவங்கியது. ஸ்பெஷலைசேஷன் என்பது முக்கியத்துவம் பெறத்துவங்கிய போது எஞ்சினியரிங்கின் ஒவ்வொரு பிரிவுகளும் இரண்டிரண்டாக பிரிந்து செல்கள் பல்கிப் பெருகுவதைப்போல பெருகியது. இன்னும் பெருகிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் விரிவாக்கங்களும், ஆராய்ச்சிகளும், செயல்திட்டங்களும் இன்னும் ஆழமான எஞ்சினியரிங் அற்புதங்களைக் காண நம்மை கொண்டு செல்லும் என்பதில் வியப்பில்லை.
சிலவாக இருந்த பிரிவுகள் இப்போது சிவில், கன்ஸ்ட்ரக்ஷன், அக்ரிகல்ச்சர், மெகானிகல், மெட்டீரியல்ஸ், மைனிங், பிரிண்டிங், உற்பத்தி (Manufacturing), தொழிலகம், ஏரோநாடிகல், தயாரிப்பு (Production),ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், வடிவமைப்பு, கம்ப்யூட்டர் அறிவியல், தொலைத்தொடர்பு, கருவியியல், வேதியியல், எனர்ஜி, உணவியல், மருந்தியல், சூழலியல்.. இன்னும் இன்னும் என நுண்ணிய பிரிவுகளாக பிரிந்து பொறியாளர்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. சிலந்திவலை போல எஞ்சினியரிங்கின் ஒவ்வொரு பிரிவுகளும் பின்னிப்பிணைந்து உள்ளன. இது பெரிது, அது உயர்ந்தது, இல்லையில்லை இதுதான் சிறந்தது என எந்தப் பிரிவுகளையும் சொல்லிவிடமுடியாது.
இப்போது நீங்கள் அணிந்திருக்கும் ஆடையை உருவாக்கித்தந்தது எது எனக்கேட்டால் உடனே சொல்லிவிடுவீர்கள். டெக்ஸ்டைல் எஞ்சினியரிங். சரிதான். ஆனால் அதுமட்டும்தானா? அது தனிப்பட்டதா? பல்வேறு பிரிவுகளின் துண்டுகள் இணைந்ததுதான் அது அல்லவா? பருத்தியை நூலாக மாற்றவும், நெய்யவும் பெரிய எந்திரங்களும், தொழிற்சாலையும் தேவைப்பட்டனவே (Mechanical, Industrial, Production). அவை இயங்க மின்சாரமும், அதைச்சார்ந்த கருவிகளும் (Electrical), கணினிக்கட்டுப்பாடுகளும் (Electronics, Computer, Software) தேவைப்பட்டன. அவற்றை நிறமேற்ற வேதியியல் (Chemical) பயன்பட்டது. இவை நேரடியாக சம்பந்தப்பட்ட பிரிவுகள் மட்டுமே, இன்னும் மறைமுகமாக என்று பார்த்தால் ஒவ்வொன்றையும் சொல்லி மாளாது.
மேலும் ஒவ்வொரு துறைகளின் அற்புதத்தையும், தொழில்நுட்ப புரட்சியையும் நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். கடல்களுக்கு உள்ளேயும், உயர்ந்த மலை முகடுகளிலும் உறுதியான நீண்ட மலைக்க வைக்கும் பாலங்கள், கடலுக்குள் கண்ணாடிக்கட்டிடங்கள், பாலை நாடுகளில் செயற்கைக்கடல்கள் என சிவில் துறையின் அற்புதங்கள். அதிவேக ரயில்கள், விமானங்கள், வியக்கவைக்கும் கார்கள், 300 டன் வெயிட்டையெல்லாம் சாதாரணமாக இழுத்துச்செல்லும் பெரிய்ய லாரிகள் என ஆட்டோமொபைல் விந்தைகள், விமானங்களை, ராக்கெட்டுகளைக் கட்டும் தொழிற்சாலைகள், வானளாவிய எந்திரங்கள் என பிரமிக்கச்செய்யும் எந்திரவியல், வெட்டிப்பிளக்காமல் உடலின் உள்சென்று ஊடுருவும் மைக்ரோ கருவியியல், இன்னும் இன்னும்.. இவற்றையெல்லாம் யாவரும் நொடியில் அறிந்திடச்செய்யும் தகவல் தொழில்நுட்ப பிரமிப்பு என எஞ்சினியரிங்கின் வளர்ச்சி மனிதகுலத்தின் வளர்ச்சிக்கான முக்கிய அளவுகோல்.
அட.. எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறோமே.. பேக் டு த பாயிண்ட் குவாலிடி.
முதலில் இழப்புகளைக் கட்டுப்படுத்துவதில் துவங்கிய குவாலிடியின் பயணம், விரயங்களைக் கட்டுப்படுத்துதல், வேக உற்பத்தி என்று பயணித்து வாடிக்கையாளர் திருப்தியை (Customer satisfaction) நோக்கமாக கொண்டு தொடர்ந்து இப்போது வாடிக்கையாளர் மகிழ்ச்சி (Customer ecstasy) என்று தன் பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நீண்ட நெடும்பயணத்தில் பலவிதமான அறிவியல் வழிமுறைகள் (Methods), கருவிகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் என பயன்படுத்தப்பட்டுள்ளன, பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வழிமுறைகளும், சித்தாந்தங்களும் சுவாரசியமானவை. பல அரிய வெற்றிக்கதைகளுனூடே சில தோல்விக்கதைகளும் உண்டு. 5எஸ், லீன், சிக்ஸ் சிக்மா, போகே யோகே, CAPA, NVA போன்ற சில வழிமுறைகளையும் (Tools), கோட்பாடுகளையும் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் இன்று இன்னொரு முக்கியமான என்னைக்கவர்ந்த ஒரு தத்துவத்தைக் காண்போம்.
ஏன் குவாலிடி என்பது அவசியமானது? பணவிரயம், உழைப்பு விரயம், நேரவிரயம் நேர்கிறது. பிறகு.?
உங்கள் வீட்டில் இப்போது இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருட்கள் என்னென்ன இருக்கின்றன என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? பழங்கள், அரிசி, உணவுப்பொருட்கள், தண்ணீர் என உடனே சொல்லிவிடுவீர்கள். ம்.. அப்புறம்? என்கிறேன் நான். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆம்.. அதேதான்.! அத்தனையும்தான்..!!! நீங்கள் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் கணினித்திரைக்கான மூலப்பொருட்கள், கண்ணாடி, பிளாஸ்டிக் அத்தனையும் இயற்கையிலிருந்தே பெறப்பட்டன. கொஞ்சம் உங்களைச்சுற்றிலும் பாருங்கள். செங்கல், சிமெண்ட், புத்தகங்கள், மேஜை, அதன் மீதிருக்கும் டம்ளர், அதற்குள்ளிருக்கும் தேநீர் என இரும்பிலிருந்து துரும்பு வரை அத்தனையும் இயற்கையிலிருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களின் மாறிய உருவம்தான். இப்போது சொல்லுங்கள். ஒரு சிறிய பேனா தரமற்றதாக இருந்து வீணாகும் போது இயற்கையை நமது கவனக்குறைவால் வீணடிக்கிறோம் என்று பொருளாகிறது அல்லவா?
இயற்கை மனிதர்கள் பயன்படுத்திக்கொள்ளவே தன்னை ஈந்து நிற்கிறது, அதிலிருந்து ஒரு துளியும் வீண் செய்ய நமக்கு உரிமையில்லை. கச்சிதமாக நமது முழுமையான பயன்பாட்டுக்காகவும், மறு சுழற்சிக்குரியதாகவுமே நாம் உருவாக்கும் ஒவ்வொரு பொருளும் இருந்தாக வேண்டும். ஜப்பானிய தொழில்நுட்ப மேதை 'தா கு சி' (Ta gu chi) உணர்ந்து சொன்ன இந்த கோட்பாட்டிற்குப் பின்னர் குவாலிடி துறை தனக்கான தனித்துவமான கடமையை உணர்ந்தது. அதற்காகவும், இன்ன பிறவற்றிற்காகவும் தன் வழியில் செவ்வனே பீடு நடை போட்டுக்கொண்டிருக்கிறது குவாலிடி எஞ்சினியரிங் (Quality Engineering).
பி.கு : கொஞ்சம் நீளமாக போயிடுச்சோ.. ஸாரிபா. இதை தூங்கிவழியாமல் முழுசா படிச்சவுங்களுக்கு அடுத்த முறை நேரில் பார்க்கச்சொல்லோ ஒரு கோxxரும் கோழிபிரியாணியும் வாங்கித்தரப்படும். முன்னதாக பதிவிலிருந்து கேள்வி கேட்கப்படும்.
.