இளமைத்துடிப்புடன் ஓடித்திரிந்த ஆனைக்குட்டி மிகுந்த வேதனை தந்த நாற்காலி வாழ்க்கையை ஏற்க சில மாதங்களாயிற்று. பின்னர் நிதர்சனத்தை புரிந்து கொண்ட ஆனைக்குட்டி பள்ளி செல்லும் பிள்ளைகள் மாலை நேரத்தில் மரநிழலில் விளையாடுவதைக் கண்டு ரசிக்கத்துவங்கினான். அவர்களின் சில விளையாட்டுகளில் அமர்ந்தவாறே பங்குகொண்டான். பாடங்கள் சொல்லித்தந்தான். மாலை நேரங்களில் தேடி வந்த நண்பர்களுடன் பேசி மகிழ்ந்திருக்கத் துவங்கினான். அவன் முகத்தில் மீண்டும் சிரிப்பைக் கண்டு கொஞ்சம் ஆறுதலை அடையும் போது பார்வதியின் கைகளில் ஐந்தாவது குழந்தை காந்திமதி சிரித்துக் கொண்டிருந்தாள். குழந்தையை மடியில் கிடத்தி ஒற்றைக்கையால் பிடித்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டிருக்க விரும்பினான். முந்தைய பிள்ளைகளுக்குக் கிடைக்காத வாய்ப்பு இந்தப் பிள்ளைக்குக் கிடைத்தது. நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவன் மடியில் பிள்ளையைக்கிடத்திவிட்டு பிற வேலைகளை கவனிக்கத்துவங்கினாள் பார்வதி. அவனது சகல தேவைகளையும் கவனிக்கும் தாயானாள் பார்வதி. குளிக்க வைத்தாள், உடையணிவித்தாள், உணவை ஊட்டினாள். ஐந்தோடு அவளுக்கு ஆறாவது பிள்ளையானான் ஆனைக்குட்டி.
சில மாதங்களுக்குப் பிந்தைய ஓர் நாளில் பிள்ளைகளை உறங்க வைத்துவிட்டு, கட்டிலில் படுத்திருந்த கணவன் உறங்கிவிட்டானா எனப் பார்க்க விழைந்தவளின் வலது கையை இடது கையினால் பற்றினான் ஆனைக்குட்டி. இந்த இறுக்கம் இந்தக்கைகளில் இப்போது எப்படி? இந்தப் பிடி அவளுக்குள் ஆயிரம் கதை பேசும் பிடியல்லவா? அதிர்ந்து நின்றாள் பார்வதி நாச்சியார். இது எப்படி சாத்தியமாகும்? அவனால் சாத்தியமாயிற்று. அவளால் சாத்தியமாயிற்று. அடுத்த மூன்றாவது மாதம் ஒரு மாலை வேளையில் அவள் வாந்தியெடுத்த போது வேப்பமர நிழலில் நாற்காலியில் அமர்ந்திருந்த ஆனைக்குட்டி இடதுகையினால் எண்ணையைத் தொட்டு மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டிருந்தான்.
வயல்வெளிகளையும், தோட்டங்களையும் பார்வதி கவனிக்கத்துவங்கினாள். இருந்த இடத்திலிருந்தே அவளை ஆட்டிவைத்தான் அவன். தான் அறிந்ததையெல்லாம் அவள் அறிய வைத்தான். பருத்திக்காட்டின் மூன்றாவது பூச்சிக்கொல்லி மருந்தடித்தலின் அளவும், காலமும் என்ன?. புளியங்காய்கள் ஏன் சொத்தைப்பட்டுப் போய்விடுகின்றன? வாழைப்பராமரிப்பு எத்தனை சிரமமானது? மிளகாய் ஏன் நாம் பயிரிடுவதில்லை? தென்னைக்கு என்ன உரம்? அனைத்தும் அறிந்தாள். வீட்டை பன்னிரண்டு வயதான மூத்த பிள்ளை பார்த்துக்கொள்ள வயல்வெளிகளை அறிந்தாள். அவளின் சாட்டையாக அவன் இருந்தான். அவனை விடவும் சிறப்பாக அவள் விளைவித்த கரைவயலின் அறுவடை நாளின் போது உடனிருக்கமுடியாமல் ஆறாவது பிள்ளையை பெற்றெடுப்பதற்காக வீட்டில் கதறிக்கொண்டிருந்தாள். அந்த ஆறாவது பிள்ளையைப்பெற்ற மயக்கத்தில் அவளிருந்த அதே மாலையில் அறுவடை ஒன்றரை மடங்காய் வீடுவந்து இறங்கிக் கொண்டிருந்தது. பார்வதியை பிரமிக்கத்துவங்கியிருந்தான் ஆனைக்குட்டி. அவளது வீட்டிற்கும் காட்டிற்குமான அலைச்சல்களை ரசனையோடு கவனிக்கத் துவங்கியிருந்தான்.
அவனையும் மீறிய ஒரு கணிப்பு அவளுக்கிருந்தது. எதிர்காலம் பள்ளிக்கல்வியை முன்னிறுத்தும். பிள்ளைகளை பள்ளிக்கு வலிந்து அனுப்பினாள். கடிந்து அனுப்பினாள். அதையும் மீறி முத்துப்பாண்டி எட்டாம் வகுப்பில் இரண்டு வருடங்கள் தங்கிவிட்டு பின்னர் தாயோடு தோட்டத்தில் நின்றான். தங்கம்மா நாச்சியார் முன்னமே பள்ளி செல்வதை நிறுத்தியிருந்தாள். தாயின் தீவிரம் கண்ட பிற பிள்ளைகள் ஒழுங்காக பள்ளி செல்லத் துவங்கியிருந்தன.
பின்பு வந்த ஒரு மாசி மாதத்தின் ஒரு நள்ளிரவில் தண்ணீர் தர எழுந்தவளின் இடுப்பை அவன் இடது கையினால் வளைத்தபோது முதன்முறையாக தயங்கினாள். அவன் காதோடு புலம்பினாள்..
‘ஊரென்ன சொல்லும்?’
அவனும் புன்னகையுடனே பகிர்ந்தான், ‘சொல்லுதவள கூட்டியா.. பத்து மாசத்துல ரெட்டப்புள்ள குடுக்கேன்’
“பாவதி..” இந்த முறை தெளிவான அழைப்பில் விருட்டென எழுந்து கட்டிலினருகே சென்றாள்.
“இருக்கேன்யா.. தண்ணி வேணுமா? மருந்து தேச்சிவிடவா?”
“ஒண்ணும் வேண்டா.. பக்கத்துல வா..”
“..ம்..” மிக அருகே சென்றாள். என்றுமில்லாத தெளிவு அந்த முகத்தில் இன்று. முதன்முதலாக அவனைக்கண்ட போது பார்த்த அந்த பொலிவு.. இப்போது இந்த வற்றிய முகத்தில்.! அதே அழகான சிரிப்பு.
“பிள்ளையளெல்லாம் எழுப்பு.. நா.. பாக்குணும்”
வருவதறிந்த பார்வதிக்கு இதயமே நின்றுவிடும் போலிருந்தது. “தூங்குதுவளே.. காலையில பாத்துக்கிடக்கூடாதா?”
“எழுப்பேன்.. பாக்குணுங்கிறன்லா..”
தன்னைக் கட்டுக்குள் வைத்திருந்த பார்வதி பிள்ளைகளை எழுப்பினாள். நிற்க முடியாமல் பிள்ளைகள் தூங்கி வழிந்தன. முத்துப்பாண்டியும், தங்கம்மாவும் என்னவோ ஏதோவென விழித்துக்கொண்டனர். மற்றவை தூக்கம் கலையாமல் தாயின் சேலைத்தலைப்பை பிடித்து தொங்கிக்கொண்டிருந்தன. கடைசிப்பிள்ளையை பார்வதி கையில் வைத்திருந்தாள். சொல்லாமலே அணைந்து போகவிருந்த அரிக்கேன் விளக்கைத் தூண்டிவிட்டிருந்தாள். ஆனைக்குட்டி மெல்லிய சிரிப்புடன் இடதுகையால் பிள்ளைகளை தொட்டுப் பார்த்துக்கொண்டான்.
“சும்மாதா கூப்புட்டேன்.. பாக்குணும் போலயிருந்துச்சு.. போய் படுக்கச்சொல்லு எல்லாத்தியும்...”
அனைவரையும் படுக்க வைத்தாள். பின்னர் அவனருகே வந்தாள். இவளது வலது கையைப் பிடித்த அவனது இடது கையில் வலுவில்லை. கட்டிலில் உட்காரச்சொன்னான். அவனது தோளருகே அமர்ந்தாள். எந்நேரமும் உடைந்துவிடக்கூடியதாய் அவள் இருந்தாள். அந்த மெல்லிய நிலவொளியிலும் அவனது கண்கள் பளபளத்தன. முகத்தோடு முகம் நெருங்கியபோது, அவற்றில் இன்னும் ஒரு ஜென்மம் உன்னோடு இருக்கவேண்டும் என்ற ஆசை பளபளத்ததைக் கண்டாள். ஆனால் சொல்வதற்கு அவனிடமோ, அவளிடமோ வார்த்தைகள் ஒன்றுமில்லை. நரகம் இப்போது அவள் இருக்கும் இடமாய் அவளுக்குத் தோன்றியது. முதல் முறையாக அவன் கண்களில் கண்ணீரைக்கண்டாள். காதை நோக்கி வழிந்த கண்ணீரை தன் கன்னத்தால் துடைத்தாள்.
“ஏங்ய்யா.. இப்பிடிலாம் பண்றீய..?”
“இப்ப எதுக்கு அழுவுத..? எப்பிடியா பட்டவ.. நீ? எனக்குஞ்சேத்து இருக்க வந்தவள்ளா நீ? பிள்ளையள ஆளாக்கி படிக்கவெச்சி கலியாணம்பண்ணி வெச்சி பேரம்பேத்தியள பாத்து.. அவ்வொ பிள்ளையளவும் பாத்துட்டுல்லா நீ வரணும்.. எத்தன பேத்துக்கு இப்பிடி சொல்லிட்டுப் போற குடுப்பின இருக்கும்? ஒனக்கு ஒண்ணும் அவசரமில்ல.. நீ நல்லாயிருப்பே..”
அந்த ‘நீ நல்லாயிருப்பே..’ என்ற வாழ்த்து நூறாண்டு தவமிருந்த பலனாய் கிடைத்த வரத்திற்கு ஒப்பானதாய் இருந்தது. அனைத்தும் புரிந்த பார்வதியின் கண்கள் அன்று சிந்திய கண்ணீர் அவனது முகமெங்கும் ஈரம்படரச்செய்தது. தொடர்ந்து விடிந்த காலையில் அவன் அவளோடு இல்லை. அவள் கால்கள் பின்னர் கடந்த பாதையில் மலர்கள் கிடக்கவுமில்லை. அவளது கண்கள் பின்னர் கண்ணீர் கண்டறியவுமில்லை.
சுமார் ஐம்பது வருடங்களுக்குப் பின்னர் ஒரு மாலை நேரத்தில் மடியில் விளையாடிக்கொண்டிருந்த காந்திமதி அதன் அம்மாவைத்தேடி அழத்துவங்கியிருக்க, முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்த பேரனிடம் அதுவும் ஓர் ஆண்மகனிடம் யாரிடமும் இதுவரை சொல்லிருக்காத ஒரு கதையினை சொல்லி முடித்திருந்த போது அந்த பார்வதி ஆச்சியின் கண்கள் லேசாக கலங்கியிருந்தன. இந்தக்கதையை அவள் எங்கு துவங்கினாள்.. எங்கு முடித்தாள்.? இன்றைய பெண்களும் பேசத்தயங்கும் செய்திகளை பகிர்ந்துகொள்ள அவளைத்தூண்டியது எது? அந்த நெகிழ்ச்சி கணவன் விட்டுச்சென்ற பணிகளை செவ்வனே நிறைவேற்றியதால் ஏற்பட்ட மகிழ்ச்சியா.?
".. ஆனா அவ்வொ சொன்ன மாதி இன்னும் தெடமாத்தா இருக்கேன்.. இன்னும் தோட்டவேலய நானேதான் பாத்துக்கிடுதேன்.. ஒம்பிள்ளை கலியாணத்தையும் பாத்துட்டுதான் போவேனு நினைக்கேன்..”
சிரித்தபடி தொடர்ந்தவள்,
“அவ்வொ சொன்ன மாதி எல்லாத்தியும் பாத்துட்டேன்.. இன்னும் அவ்வுளுக்கு என்னிய கூப்பிட்டுக்கதான் ஆசையில்ல போலுக்கு.."
பனித்த கண்ணீரை தன் வெள்ளைச்சேலை முந்தானையில் துடைத்துக் கொண்டாள்.





