ல் இப்போது அது தெரியவில்லை. கால்களில் ஏனோ வழக்கமாக அணிந்திருக்கும் செருப்பு இல்லை. மெயின்ரோட்டுக்கு தென்திசையில் ஒன்றரை கிமீ தூரத்தில் இருக்கும் அவரது வயற்காட்டிற்கு சென்றுகொண்டிருந்தாலோ அல்லது போய்த் திரும்பிக்கொண்டிருந்தாலோ கையில் ஒரு பெரிய அரிவாள் இருக்கும். அதை அழகாக திருப்பிப்பிடித்திருப்பார். கைப்பிடியை தலைகீழாக உள்ளங்கை பிடித்திருக்க மறுபுறம் புறங்கையின் பின்புறம் கையை ஒட்டி மேல் நோக்கி இருக்கும். இன்று அது கையில் இல்லை. ஒரு வேளை வயலுக்குப்போகாமல் தன் வயதொத்தவர்களுடன் டீக்கடையில் பேசிக்கொண்டிருந்து பொழுதுபோக்க மெயின் ரோட்டுக்கு வந்துகொண்டிருக்கலாம்.
சாலையை கடக்கும் ஒரு சிறிய ஓடைக்காக கட்டப்பட்ட ஒரு சிறிய பாலம். அதைத்தாண்டிய தென்புறம் நல்ல அகன்ற முற்றத்துடன் கூடிய கருப்பசாமி கோயில். கோயில் என்றால் முழுதுமான கோயில் இல்லை, பீடங்கள் மட்டும்தான். கோயில் மற்றும் முற்றத்தையும் சேர்த்து சுற்றிலும் நீள்வட்டமாக பெரிய பிரம்மாண்டமான பத்துப்பன்னிரண்டு மரங்கள். அவற்றின் வயது நிச்சயம் பல தசாப்தங்களை கடந்திருக்கும். இரண்டு ஆலமரங்கள். அதில் ஒன்று மிகப்பிரமாண்டமாய் அடர்ந்து விரிந்து பல விழுதுகளும் ஊன்றத்துவங்கியிருந்தது. மற்றவை பெரும்பாலும் மிக அகன்றும், உயர்ந்தும் இருந்த அரசமரங்கள். செதில் செதிலாக பல அடுக்குகளாய் உரிந்திருக்கும் அதன் பட்டைகளிலிருந்து அவற்றின் வயதைக்கணிக்கலாம். இந்த அந்திக் கருக்கல் நேரத்தில் மரங்களால் கோவிலின் முற்றம் விரைவாகவே இருட்டிக்கொண்டிருந்தது. கோயிலை அடுத்து ஒரு கல் பவுண்டி (பவுண்டரி : கள்ளத்தனமாய் வயல்களில் இறக்கப்படும் மாடுகளுக்கான சிறை). ஒரே நேரத்தில் சுமார் 50 மாடுகளை அடைத்துவைக்குமளவில் கற்களால் கட்டப்பட்ட ஆளுயர சுவர்களால் ஆனது அது. அதையடுத்துதான் இரண்டுபுறமும் கடைகள் ஆரம்பிக்கின்றன. ஓலைச்சாய்ப்புகளில் டீக்கடைகள் மூன்று. அதில் ஒன்றில் காலை மற்றும் இரவு டிபன் கிடைக்கும். இரண்டு மளிகைக்கடைகள், நான்கு பெட்டிக்கடைகள். இரண்டு சைக்கிள் கடைகள், ஒரு டெய்லர் கடை, ஒரு சலூன், ஒரு பருத்தி குடோன்.. மொத்த மெயின்ரோடும் அவ்வளவுதான். அதையும் தாண்டிச்சென்றால் ஒரு தரைப்பாலம். அதன் வலது புறம் சிறிது தூரத்தில் காவல் நிலையம். அதன் பின்னர் இருபுறமும் துவங்கும் வயற்காடுகள்.
வடக்குத்தெரு சரியாக கருப்பசாமி கோயிலில் மெயின்ரோட்டைச் சந்திக்கிறது. மெயின் ரோட்டை அடைந்த நடராஜன் வலது புறமாக திரும்பி கல்யாணி டீக்கடையை நோக்கி நடக்கத்துவங்கினார். கை அனிச்சையாய் இடதுபுறமிருந்த கருப்பசாமியை வணங்கிக்கொண்டது. அப்போதுதான் அது நிகழ்ந்தது.
"ஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்.." என்ற மிகப்பெரிய அலறல் இடது புறம் காதுகளில் செவிப்பறையை கிழிக்க, சிந்திக்க விநாடி நேரமுமில்லாமல் விபரீதத்தை அனிச்சையாய் அவர் மனம் உணர்ந்து இடது புறம் திரும்பினார். அவர் கழுத்தைக்குறிவைத்து வந்துகொண்டிருந்த அரிவாளுக்காக வலது புறம் மேலும் ஒதுங்கியும் தப்பமுடியவில்லை. அந்த முதல் வெட்டு இடது புஜத்தில் விழுந்தது மிக ஆழமாய். நிலைதடுமாறியும் உடல் பலம் உதவ வலது கையினால் அடுத்த வெட்டு விழாமல் அந்த அரிவாளை வெட்டியவனின் கையோடு சிக்கென பிடித்தார். அவன் கோவில் மரமொன்றின் பின்னாலிருந்து ஓடி வந்திருக்கவேண்டும். விநாடிகள் நேரம்தான். பரிதாபம், பவுண்டியின் சுவரிலிருந்து வெளிக்குதித்து வந்த இன்னொருவனை இவர் முழுவதுமாக கவனிக்குமுன்பாகவே அடுத்த வீச்சு அவர் கழுத்தை குறிவைத்து தவறாக இடது புறமாக அவரது தலையில் விழுந்து காது, கன்னம், தாடையை சிதைத்தது. ரத்தம் பீய்ச்சியடிக்க வலியை உணரும் முன்பே அனிச்சையாய் ஓட முயன்று நினைவு தப்ப, கால்கள் இரண்டடி வைத்த நிலையில் மடங்கிச்சரிந்தார் நடராஜன். இரண்டாமவன் காரியம் முடிந்ததென அந்த பதற்றத்திலும் உணர்ந்து "ஓடுறா மாப்ள.." என்று கத்திக்கொண்டே கிழக்குத்திசையில் ஓட ஆரம்பித்தான். முதலாமவன் இன்னுமொரு வெட்டுக்கு முயன்று நடராஜன் நகர்ந்ததில் அவரது பின்பாகம் துவங்கி, இடது தொடை வரை நீண்டு ஒரு ரத்தக்கோட்டை போட்டு அதற்கும்மேல் அவகாசமில்லாமல் ஓட ஆரம்பித்தான். இதற்குச்சில விநாடிகள் முன்னதாகவே நூறடி தொலைவில் இருந்த கல்யாணி டீக்கடை மற்றும் சுந்தரபாண்டி பெட்டிக்கடையின் முன்னால் நின்று கொண்டிருந்த இரண்டு பேர் நடராஜன் தாக்கப்படுவதைக்கண்டு ஒரு பெருத்த கூச்சலோடு இவர்களை நோக்கி ஓடிவந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கும் பின்னால் இன்னும் பலர்.
சில நூறடி தூரத்தில் ஒரு காவல் நிலையம் இருந்தும் இந்த மாலை நேரத்தில் இந்த கொடும் சம்பவம் நிகழ்ந்துமுடிந்திருந்தது. சிலர் ரத்த வெள்ளத்தில் கிடந்த நடராஜனை கவனிக்க, சிலர் அரிவாள்களுடன் ஓடிச்சென்றவர்களை துரத்திச்சென்றிருந்தனர். நடராஜனின் அருகிலிருந்தவர்கள் அவர் கிடந்த நிலையைக் கண்டு அவர் இனியும் பிழைப்பார் என்ற நம்பிக்கையை இழந்திருந்தனர். அடுத்த சில நிமிடங்களில் வந்த போலீஸ் ஏட்டு முத்துவேல் நடராஜனுக்கு துடிப்பு இருப்பதை உணர்ந்து உடனடியாக செயல்பட்டு போலீஸ் ஜீப்பிலேயே திருநெல்வேலி மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று சேர்த்தார். ஊரிலிருந்து ஆண்கள் பெண்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் அடுத்த சில மணி நேரங்களில் மருத்துவமனையில் திரண்டிருந்தனர். ஊரில் அவ்வளவு மரியாதையை அவர் சம்பாதித்திருந்தார். மூன்று நாட்களுக்குப்பின்னர் அவர் மருத்துவமனையில் கண்விழித்தபோதுதான் ஊரே நிம்மதியடைந்தது. ஆனால் அவர் முழுதும் குணமடைந்து ஊர் திரும்பத்தான் பல மாதங்கள் ஆகிவிட்டன.
இரண்டரை மாதங்கள் கழித்து அவர் வீட்டிற்கு வந்த போது தொடர்சிகிச்சைக்காக மொட்டையடிக்கப்பட்டிருந்தார். மீசையும் மழிக்கப்பட்டிருந்தது. இடதுகால், தொடைப்பகுதி ஓரளவு குணமடைந்திருந்தாலும் இடது கைதான் இன்னும் குணமாகவில்லை. கையில் உணர்வு இருந்தாலும் அந்தக்கையினால் அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. சரியாக இன்னும் சில மாதங்கள் பிடிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். அவரால் தெளிவாக பேசமுடியவில்லை. இடது புற, முன்பக்கப்பற்கள் முற்றிலுமாக சிதைந்திருந்ததால் அவை நீக்கப்பட்டிருந்தன. மேலும் சிறிதுகாலம் கழித்து செயற்கைப்பற்கள் கட்டப்பட்ட பிறகே அவரால் ஓரளவு பேசமுடிந்தது.
இடையிடையே நிகழ்ந்த போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைத்தார். மிகவும் அமைதியாக காணப்பட்டார். சாதாரணமாகவே கொஞ்சம் கோபக்காரரான அவருக்கு இப்போது யார் மீதும் கோபம் இருப்பது போல தெரியவில்லை.
"யாரா இருக்கும்னு நினைக்கிறீங்க.." ஏட்டு முத்துவேல் கேட்டபோது,
"தெரில சார். சேர்மாதேவி தோப்பு குத்தகைல ராசுபாண்டியன் கூட பிரச்சினை இருக்கு. ஆனா அவுரு இப்பிடிலாம் பண்ணக்கூடிய மனுசமில்ல. ஏன் ஒண்ணுவிட்ட தங்கச்சி ஒருத்திய அம்பாசமுத்ரத்துல கட்டிக்குடுத்துருக்கேன். ஒங்களுக்கு கூட தெரியுமே. பிச்சம்மா. அவா புருசம் அவளப்போட்டு அடிக்காம்ன்னு ஒரு நா அவன நாலு பேரு மின்னாடி ரெண்டு இழுப்பு இழுத்துட்டேன். இதுக்கெல்லாம் போயி இப்பிடி பண்ணுவானா தெரில. மத்தபடி நமக்கு ஒர்த்தர்கூடயும் பிரச்னை கெடையாது. என்னா.. அடிக்கடி நம்ம வயான்னு பாக்காம யாரு வயல்ல மேஞ்சாலும் மாடுவள புடிச்சுட்டு வந்து பவுண்டில பூட்டிருவேன். பஞ்சாயத்துல பணங்கட்டிதான் மாடுவள மீக்கணும். அதுல பக்கத்தூருக்காரங்களுக்கு ஏம்மேல கோவம் இருந்துருக்கும். ஆனா இதுவரைக்கும் எவனும் நேர்ல சொல்லல.."
"அன்னிக்கி வெட்டுனது யார்னு அடையாளம் பாத்தீங்களா?"
"மரத்துக்குபின்னால ஒளிஞ்சிருந்து பின்னாலயிருந்து வந்து வெட்டிட்டானுவோ. அப்போவே நல்லா இருட்டி வேறப்போச்சா.. அடையாளந் தெரில.. ஆனா சின்னப்பயலுவதான், இருவது இருவத்திரண்டு வயசிருக்கும் அவ்ளதான்.."
வெட்டப்பட்ட அன்று அவர்களைத் துரத்திச்சென்றவர்கள் வெறுங்கையோடு திரும்பியிருந்தனர். ஓடியவர்கள் கிழக்கே ஒரு அரைகிலோமீட்டர் ஓடி தெற்குப்பக்கமாய் வேலிக்கருவை காடுகளுக்குள் இறங்கி ஓடி அதற்கும் அப்பால் இருந்த சிற்றாற்றில் இறங்கி அதன் மறுபுறம் அடர்ந்த தாழம்புதர்களில் விழுந்து கடந்து ஓடிவிட்டனர். துரத்திச்சென்றவர்கள் சிற்றாறு வரை சென்றுவிட்டு இருட்டிய தாழம்புதர்களுக்கும், அதன் பாம்புகளுக்கும் பயந்து திரும்பவேண்டியதாயிற்று. தொடர்ந்த விசாரணையால் போலீஸால் ஒன்றும் பண்ணமுடியவில்லை.
கல்யாணி டீக்கடையில் சேக்காளிகள் சுந்தரமூர்த்தி, ராமையாவுடன் பேசிக்கொண்டிருந்தார் நடராஜன். அதிகாலை நேரமென்பதால் தலைக்கு பூத்துவாலையை தலைப்பாகை கட்டியிருந்தார். அருகில் அவரது சைக்கிள் நின்றுகொண்டிருந்தது. சைக்கிள் ஹாண்டில் பாரில் ஒன்றரை அடி நீள அரிவாள் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தது. இப்போதெல்லாம் வயலுக்குப் போகாவிட்டாலும் கூட அவரது சைக்கிளில் எப்போதும் இந்த அரிவாள் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. பாதுகாப்புக்காக இருக்கலாம்.
'நடந்த சம்பவத்துக்கு நடராஜனாக்குள்ள இவ்ள சீக்கிரம் எழுந்து நடமாடிக்கிட்டிருக்காரு. வேற எவனாவதுன்னா போன எடம் புல்லு மொளச்சிருக்கும். வெட்னவன ஆளப்பாக்காம போயிட்டாரே.. பாத்திருந்தார்னா இந்நேரத்துக்கு என்னாயிருக்கும்..' னு ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.
அடுத்த சில மாதங்களில், தன்னிடமிருந்த சுமார் 40 மாடுகளில் பாதியை மந்தை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் வயல்வெளிகளில் இறக்கி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கீழூர் நாராயணன் ஒரு நல்ல வளர்பிறை நாளில் கருங்குளத்துக்கரையில் இறந்துகிடக்க, நடராஜன் குளத்துக்குள் இறங்கி நிதானமாக அரிவாளை கழுவிக்கொண்டிருந்தார். அதற்கு சாட்சியாக இருந்தது மேகங்களுடன் விளையாடிக்கொண்டிருந்த அந்த பிறைநிலவு மட்டும்தான்.
.